தையிட்டியில் மீண்டும் உயிர்பெறும் மண் – 2,200 கிலோ சின்ன வெங்காயம் அறுவடை
நீண்ட காலமாக மக்கள் பயன்பாடின்றி காணப்பட்ட தையிட்டி பகுதியின் விவசாய நிலங்கள் மீண்டும் பயிர்ச்செய்கை மூலம் உயிர்ப்பெற்று வருவது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“மண்ணும் உழைப்பும் மீண்டும் உயிர்பெறும் தையிட்டி” என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், தையிட்டியைச் சேர்ந்த விவசாயி திரு. சுப்பிரமணியம் ஜெயதரன் தனது கடின உழைப்பின் பலனாக சுமார் 2,200 கிலோ சின்ன வெங்காயத்தை அறுவடை செய்துள்ளார்.
தையிட்டியைச் சேர்ந்த சில புலம்பெயர் மக்கள், தமக்குச் சொந்தமான காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக, விவசாய முயற்சிகளில் ஈடுபட விரும்புவோருக்கு சட்டபூர்வமான முறையில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், ஜெயதரன் அவர்களின் வெங்காயப் பயிர்ச்செய்கைக்காக 22 பரப்பு காணி நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
காணியை விவசாயத்திற்கு ஏற்ற வகையில் துப்புரவு செய்தல், வேலி அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் கிணற்று நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், விவசாயியின் முயற்சிக்கு காணி உரிமையாளர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர்.
விவசாய முயற்சிக்கு இவ்வாறு ஆதரவளித்த தையிட்டியைச் சேர்ந்த நல்லுள்ளங்களுக்கு சமூக மட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்து வாழும் தையிட்டி மக்கள் தங்களுக்குச் சொந்தமான வளமான விவசாய நிலங்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், விவசாயத்தில் உண்மையான ஆர்வமும் உழைக்கும் மனப்பான்மையும் கொண்டவர்களுக்கு அவற்றை சட்டபூர்வமான முறையில் பயன்பாட்டிற்கு வழங்குவதன் மூலம், தையிட்டியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பங்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் காணப்படும் விவசாய நிலங்களை மீண்டும் உற்பத்தி நிலங்களாக மாற்றுவதுடன், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
இதேவேளை, ஜெயதரன் அவர்களின் புதிய காணியில் பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் 130 முருங்கைக் கன்றுகளை புதிய வாழ்வு நிறுவனம் வழங்கியுள்ளது.
விவசாயிகளின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதுடன், உள்ளூர் விவசாயத்தை மீளக் கட்டியெழுப்பி, நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்தகைய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவசாயம் மீண்டும் தையிட்டி மண்ணில் வேரூன்றி வருவது, நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலங்களை உற்பத்திப் பொருளாதாரத்திற்குள் மீண்டும் கொண்டுவருவதற்கான முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.





Previous Post
Next Post
